நடிகர் ஆர்யா மீதான பண மோசடி வழக்கு: மேலாளரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Published:

arya actor
arya actor

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூ.70.5 லட்சம் வரை பண மோசடி செய்ததாக, நடிகர் ஆர்யாவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார் மீதான வழக்கில், அவரது மேலாளர் முகமது அர்மானின் முன்ஜாமின் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஜெர்மன் குடியுரிமை பெற்ற வித்ஜா என்ற பெண், பிரதமர் மோடிக்கு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இ-மெயில் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹுசைனி, முகம்மது அர்மான் ஆகியோர் மூலம் நடிகர் ஆர்யா, அவரது அம்மா ஜமீலா ஆகியோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. தன்னை பிரபல நடிகர் என்று அறிமுகம் செய்து கொண்ட நடிகர் ஆர்யாவும், அவரது அம்மா ஜமீலாவும் என்னிடம் நெருங்கிப் பழகினர். ஒரு கட்டத்தில், நடிகர் ஆர்யா என்னை காதலிப்பதாகக் கூறினார். அதை நம்பி, நானும் அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். அப்போது, நடிகர் ஆர்யாவும், அவரது அம்மாவும் என்னிடம், குடும்பத்தில் உள்ள நிதிபிரச்னையைக் காரணம் காட்டி, என்னிடம் பண உதவி கேட்டனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அவர்களது குடும்பத்தில் என்னையும் ஒருத்தி என்றும், என்னை வருங்கால மருமகள் என்றும் ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி ஆர்யாவுக்கு 80 ஆயிரம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 70.5 லட்சம்) வரை பணம் அனுப்பி வைத்தேன். அவர்களின் போலி வாக்குறுதியை நம்பி, அவர்களின் மோசடிக்கு நான் இரையாகி விட்டேன்.

ஆனால், நடிகர் ஆர்யா, ஷாயீஷா என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட பிறகு தான் நான் மோசடியாக ஏமாற்றப் பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றி பணம் பறித்த நடிகர் ஆர்யா, அவரது அம்மா உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கோரியிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக, ஆர்யாவின் மேலாளர் முகம்மது அர்மான், சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ஆர்யா மீதான புகார் சென்னை சைபர் கிரைமிலிருந்து, சிபி-சிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இந்த மனு, முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி செல்வகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் வித்ஜா சார்பில் வழக்கறிஞர் பி. ஆனந்தன் ஆஜராகி, அர்மானுக்கு முன்ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பதால், நடிகர் ஆர்யாவின் மேலாளர் அர்மானின் முன்ஜாமின் மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார்.

Related articles

Recent articles

spot_img