ஏடிஎம் கார்டு தகவலை திருடி கொள்ளை! மாட்டிய கும்பல்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
atm card kollaians - 2026

ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை ஸ்கிம்மர் என்ற கருவி மூலம் சேகரித்து, பணத்தைத் திருடும் கும்பல் குறித்து அடையாறு துணை கமிஷனர் விக்ரமனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விசாரணை நடத்த நீலாங்கரை உதவி கமிஷனர் சுதர்சனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழன்பன், ஜெயபாலாஜி, தலைமைக் காவலர்கள் ஜானி விஜி, முகலின், சதீஸ்குமார், சண்முகானந்தம், முதல்நிலைக் காவலர் லோகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் கானத்தூர் முட்டுக்காடு பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணைக்காக கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கானத்தூர் போலீஸார் கூறுகையில், “வாகன சோதனையில் சிக்கியவர்கள் திருச்சி கக்கன் காலனியைச் சேர்ந்த லாவா சந்தன் (32), திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த பிரவின் கிஷோர் (30), திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கேந்தர் பாதுஷா (37) ஆகியோர் எனத் தெரியவந்தது.

அவர்களிடம் ஏராளமான ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகள் இருந்தன. அது குறித்து விசாரித்தபோது ஏடிஎம் கார்டு தகவல்களை ஸ்கிம்மர் கருவிகள் மூலம் சேகரித்து பணத்தைத் திருடியது தெரியவந்தது.

லாவாசந்தன் என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர். ஜாமீனில் வெளியில் வந்த லாவாசந்தன், தலைமறைவாகிவிட்டார்.

லாவாசந்தனின் கூட்டாளியான சிக்கேந்தர், இந்தியாவிலுள்ள பல்வேறு மசாஜ் சென்டர்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

அப்போது ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களைத் திருடி லாவாசந்தனுக்கு கொடுத்திருக்கிறார். அதன்படி போலியாக ஏடிஎம் கார்டுகளை லாவாசந்தன் தயார்செய்திருக்கிறார்.

பிறகு அதைப்பயன்படுத்தி பணத்தை எடுத்திருக்கிறார். அதை பிட் காயினில் முதலீடு செய்திருக்கிறார். இதையடுத்து இந்தக் கும்பலிடமிருந்து ஸ்கிம்மர் கருவி, லேப்டாப், போலி ஏடிஎம் கார்டுகள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஏடிஎம் கார்டு மோசடி கும்பலைப் பிடித்தவர்களை கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன், இணை கமிஷனர் (தெற்கு மண்டலம்) நரேந்திரநாயர் ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.