theft
theft

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல திருடனை போலீசார் கைது செய்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம்,இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம், மது,மாது என உல்லாச வாழ்விற்கான அந்த நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் வரை 6 வீடுகளில் தங்க நகைகள், பணம் கொள்ளை, வழிப்பறி மற்றும் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையை தடுக்கும் வகையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டன.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

கேமராக்களில் பதிவான காட்சிகள், கொள்ளை நடந்த இடங்களில் பதிவாக கைரேகை ஆகியவற்றை வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்ததில், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் (38) என்பவர் வீடுகளில் புகுந்து நகை திருட்டு மற்றும் வழிப்பறி, இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தேடப்பட்டு வந்த ரவி என்ற கார்த்திக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 90 திருட்டு வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

துரிதமாக செயல்பட்டு திருடனை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், கைது செய்யப்பட்டுள்ள ரவி தனியாக தான் எங்கும் திருட செல்வார் என்றும் கொள்ளையடிக்கும் பணத்தில் தன்னுடைய வழக்கு செலவிற்கு என குறிப்பிட்ட அளவு பணத்தை அவர் எடுத்து வைத்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

மீதமுள்ள தொகையில், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவது, மது, மாது என உல்லாசமாக வாழ்வை வழக்கமாக கொண்ட ரவி, ஏசி வசதி உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஏசி வசதி உள்ள வீடுகளில் இருப்பவர்கள் அயர்ந்து தூங்குவார்கள் என்பதால் எளிதில் திருடி விட்டு சென்று விடலாம் என்பது ரவியின் கணக்கு.

ஒரு திருட்டு சம்பவத்தினை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தினை செலவு செய்த பின்னர் தான் அடுத்த திருட்டு சம்பவத்திற்கு தயாராகி தனது கைவரிசையை காட்டி வந்துள்ளான்.

அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending