தில்லி சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை. இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. தில்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி 1.4 சதவீத ஓட்டுகளையே பெற்று இருக்கிறது. தேசியக் கட்சி அந்தஸ்தை ஒரு மாநிலக் கட்சி பெறவேண்டும் என்றால் அந்த கட்சி 4 அல்லது அதற்கும் கூடுதலான மாநிலங்களில் போட்டியிட்டு 6 சதவீத ஓட்டுகளையோ, அல்லது 2 தொகுதிகளையோ கைப்பற்றி இருக்கவேண்டும். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தகுதிகளைப் பெறவில்லை. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இந்தப் பிரச்னை நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் முழுமை பெற்றுவிடும்“ என்று தெரிவித்தனர்.