
அதிமுக., திமுக., என்று திராவிடக் கட்சிகளின் தயவில் மாறி மாறி அரசியல் செய்து கொண்டு தன்னை ஒரு யாதவ சமுதாய சாதிக் கட்சித் தலைவராகக் காட்டிக் கொண்டு வரும் ராஜ.கண்ணப்பன், திமுக., ஒரு இந்து விரோதக் கட்சியில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பது, தேர்தல் கால சீட்டுப் பிச்சையே என்ற விமர்சனங்கள் எதிரொலிக்கின்றன.
இது குறித்த தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார். அவரது கருத்து…
திரு. இராஜ கண்ணப்பன், திமுக இந்து விரோத கட்சியில்லை என்று கூறியிருப்பது அர்த்தமற்றது.. தேர்தலுக்கு தேர்தல் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளால் சிலர் மக்கள் முன் சாதி அடையாளத்திற்காக நிறுத்தப்படுகிறார்கள். அதில் ஒருவர் தான் இந்த திரு. இராச கண்ணப்பன் அவர்களும்.
கிருஷ்ண பரமாத்மா தோன்றிய யாதவ சமுதாய ஓட்டுக்களை வளைப்பதற்காக இவர் முன்னிறுத்தப்படுகிறார். அதன் பலனாக இவருக்கு ஒரு சீட்டு தேர்தலில் தரப்படுகிறது. இதைத் தவிர யாதவ சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை.
இந்து சமுதாயத்தை சாதி ரீதியாக பிரித்து ஆளவே இது போன்றவர்கள் திமுக போன்ற கட்சிகளுக்கு பயன்படுகிறார்கள். தோற்றாலும், ஜெயித்தாலும் தேர்தலுக்குப் பிறகு இவர்களுக்கும் திமுக மரியாதை தருவதில்லை, இந்து சமுதாயத்தை களங்கப்படுத்தவும் திமுக தலைவர்கள் தயங்குவதில்லை என்பதை யாதவ சமுதாயம் உணர வேண்டும். இது ஒருபுறம்.
இராச. கண்ணப்பன், திமுக இந்து விரோத கட்சி இல்லை என சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இது அந்த கட்சியின் உரிமையாளராக இருக்கும் ஸ்டாலினுக்கோ, அவரது வாரிசு உதயநிதி ஸ்டாலினுக்கோ, அவரது (ஸ்டாலின்) சகோதரி கனிமொழிக்கோ தெரியுமா?

இந்து விரோத கட்சி இல்லை என்பது உண்மையானல், ஸ்டாலின் தேவர் திருமகனார் ஜீவசமாதியில் கொடுத்த பிரசாதமான விபூதியை ஏன் கீழே கொட்ட வேண்டும்?
கனிமொழி திருப்பதி ஏழுமலையான் கற்சிலையை பார்க்க சென்றேனே தவிர வணங்க செல்லவில்லை என ஏன் கூறவேண்டும்?
உதயநிதி, விநாயகர் களிமண் பொம்மை என தனது மகளுக்குக் கூறி, கடவுள் நம்பிக்கை தனக்கு இல்லை என ஏன் கூற வேண்டும்?
நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையில்லாதவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது, கேவலப்படுத்துவதைத் தான் இந்து முன்னணி எதிர்க்கிறது. அதனால் தான் திமுக இந்து விரோத கட்சி என்று அப்பட்டமாக குற்றம் சாட்டுகிறோம்.
யாதவர்களின் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை இந்த திராவிட கட்சிகள் கேவலப்படுத்தியபோது இதே இராச கண்ணப்பன் வாய் திறந்தாரா? கண்டித்தாரா? இல்லையே.
இந்து விரோத கட்சியாகத்தான் திமுக இருக்கிறது என்பதால்தானே, அவர் வாய் திறக்கவில்லை.
இராச கண்ணப்பன் போன்றோர் திமுகவை ஆதரிப்பதும் சுயநலத்தால் தான். அந்த சுய நலம் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்த கொடுக்கப்படும் கூலி என்பதை உணர வேண்டும்.
இந்துக்களின் சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும்போது தட்டிக்கேட்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சுயமரியாதையோடு இவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என நம்பலாம். ஆனால், எப்போதாவது இவர் இது பற்றி பேசியிருப்பாரா? இல்லையே!!!.
தேர்தலுக்காக ஆதினங்களை பார்ப்பதும், வேடம் போடுவதும், நாங்கள் இந்து விரோதி இல்லை என பசப்புவதும் இந்துக்கள் தங்களுக்கு எதிராக ஒன்று சேர்கிறார்கள் என்பதால் தானே ஒழியே, திமுக திருந்திவிட்டதாக இந்துக்கள் நினைத்தால் ஏமாந்துபோவோம்.
இந்துக்கள் தெளிவடைந்துவிட்டார்கள், இனி திமுகவின் இரட்டை வேடம் இனி எடுபடாது. தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். சாதி வாரியாக பிளவுபடுத்தி தேர்தல் குளிர்காய நினைப்பவர்கள் ஏமாந்துபோவார்கள். திமுகவிற்கு வக்காலத்து வாங்கும் இராச கண்ணப்பன் போன்றோர் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…