சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மதியம் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையம் ஏ.டி.சி. டெப்போ பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் அசோக், பிரபு, நாராயணன், மணி, இளங்கோ உள்பட 6 பேர் என்பது தெரிய வந்தது. அவர்கள் கூறியதாவது,
அந்த பகுதியை சேர்ந்த பெட்டிசன் சுந்தரம் உள்பட 3 பேர் ஆட்டோவுக்கு 10 ஆயிரம் கொடுத்தால் தான் இங்கு ஆட்டோ ஓட்ட முடியும், இல்லாவிட்டால் ஆட்டோ ஓட்ட முடியாது என்று கூறி எங்களை துரத்துகிறார்கள். மேலும் நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும், நாங்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது.
எனவே பணம் தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டுகிறார்கள். இதனால் நாங்கள் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அவர்கள் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
