பாரதிய ஜனாதா கட்சியை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு
என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பலனடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குறித்து கூறினால் வழக்கு தொடர்வது வழக்கமான விஷயமாக உள்ளது. வழக்குத் தொடர்ந்தால் வாயை அடைத்துவிட முடியும் என்று நினைப்பது தவறான கருத்து.
எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊழலை மறைக்க முயற்சித்தால், ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம். இரண்டாவது பட்டியல் முதல் பட்டியலைவிட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் தமிழகத்தில் பாஜகவை திமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகின்றது. ஆனால், எதிர்க்கட்சி என்பது பாஜகவின் நோக்கமல்ல. தமிழகத்தில் ஆளும்கட்சியாக பாஜக மாற வேண்டும். சொல்லப்போனால் நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.
ஆதினம், தீட்சிதர்கள் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு தெளிவாக உள்ளது; அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதினம் போன்றவர்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கையை அமைச்சர் சேகர்பாபு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.