ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பல இடங்களில் ரெயில்களை மறித்தனர்.
பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதே போல தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியீல் எதிர்ப்பு நிலவுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதன்முதலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மீண்டும் ட்விட்டரில் மத்திய அரசை சாடியுள்ளார். மத்திய அரசால் யாரையும் திருப்திப்படுத்த முடியவில்லை. அக்னி பாதை திட்டத்தை மாணவர்கள் ஏற்கவில்லை, வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை, ஜிஎஸ்டியை வியாபாரிகள் ஏற்கவில்லை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் ஏற்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றி பெற்றுத்தந்தவர் விபி மாலிக். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்களாவர்” என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.






