சேலம் அருகே,கோட்டைக்கரட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த, 2வது கணவர், பிறந்த பெண் குழந்தையை புதைத்துவிட்டார். பிரசவித்த தாயும் உயிரிழந்தார். குழந்தை இறந்து பிறந்ததா என, 2வது கணவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சேலம் அருகே, நாழிக்கல்பட்டி, கோட்டை கரட்டில், குழந்தை, பிரசவித்த பெண் இறந்து கிடப்பதாக, மல்லுார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சேலம் ஊரக டி.எஸ்.பி., தையல்நாயகி, மல்லுார் இன்ஸ்பெக்டர் கலையரசி உள்ளிட்டோர் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பார்வதி, 30. அவருக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஜீத்குமாருடன் திருமணமாகி, 12 வயதில் மகள் உள்ளார். ஆறு ஆண்டுக்கு முன், கணவரை பிரிந்த பார்வதி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், புதுப்பட்டியை சேர்ந்த பூபதி, 25, என்பவருடன் பழகி வந்தார். அவர்கள் திருமணம் செய்து கொண்டு, சீலநாயக்கன்பட்டி யில் தங்கி, கட்டடத்துக்கு கான்கிரீட் ஜல்லி போடும் வேலை செய்தனர்.
அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. அத்துடன் முதல் கணவருக்கு பிறந்த, 12 வயது மகளையும், பார்வதி வளர்த்து வந்தார். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். 8 மாதமே ஆன நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மருத்துவமனைக்கு செல்லாமல், பார்வதி, பூபதி ஆகியோர் கோட்டைக்கரடுக்கு வந்தனர். அங்கு, பார்வதிக்கு பூபதியே பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை இறந்ததாக கருதிய பூபதி மண்ணில் புதைத்துவிட்டார். பார்வதிக்கும் ஜன்னி ஏற்பட்டு இறந்துள்ளார். தற்போது குழந்தை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை இறந்து பிறந்ததா என்றும், பார்வதி இறந்தது குறித்தும் மருத்துவ பரிசோதனையில் தான் தெரியவரும். பூபதியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
