கடலூர் அருகே கேப்பர்மலை பகுதியில் உள்ள எம்.புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பட்டாசு வாங்க வந்த ஒருவரும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.

கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்களும் கூலிக்கு பட்டாசு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.23) மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிருக்கும் ஒரு குடோன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரை மட்டமானது. அதில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சித்ரா(35), அம்பிகா(50), சத்தியராஜ்(34) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜி, வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அப்போது வெடி வாங்க வந்திருந்த வெள்ளக்கரை பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் (37) என்பவரும் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிபுலீயூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார். விபத்தில் காயமடைந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
