குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்
கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதும் அவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கயிவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்று.
இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக தாந்திரிக விதிப்படி குடமுழுக்கு விழாவின் போது, கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையை கழற்றி விட்டு பங்கெடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்க படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் கோயில்கள் முன்பாக வைக்கப்பட்டு உள்ளது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை.
120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கு செல்லும்போது, அவர்களை நிறுத்தி மதத்தினை உறுதி செய்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில், கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம் பெற்றிருப்பதை குறிப்பிட்டு அவர் இந்து அல்ல. ஆனால் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார் என தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள் பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஏராளமான இந்து கடவுள்களின் பாடல்களை பாடியுள்ளார். அவை கோயில்களிலும் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
ஆகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. இந்த விஷயங்களை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.