images 92 1 - 2026

நீட் தேர்வு பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு..?

சற்றுமுன்
images 92 1 - 2026

நீட் தேர்வு பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த முடிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மறுதேர்வு வருகிற 4-ந் தேதி நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் நடைபெற்றது. அப்போது அங்கு ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை ‘மெட்டல் டிடெக்டர்’ கொண்டு சோதனை நடத்தியபோது, அவரது உள்ளாடையில் இருந்த உலோகத்தாலான கொக்கியை ‘மெட்டல் டிடெக்டர்’, ‘பீப் ‘ஒலி எழுப்பி காட்டிக்கொடுத்தது.

இதையடுத்து அந்த மாணவி தேர்வு எழுத வேண்டுமானால், உள்ளாடையை அகற்றியாக வேண்டும் என்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர். வேறு வழியின்றி அந்த மாணவி உள்ளாடையை அகற்றிய நிலையில், 3 மணி நேரமும் மிகுந்த மன உளைச்சலுடன் ‘நீட்’ தேர்வை எழுதினார்.

இதுபற்றிய தகவல்களை அந்த மாணவியின் தந்தை வெளியிட்டார். தன் மகளுக்கு மட்டுமின்றி பல மாணவிகளுக்கு இது போன்று நடந்துள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கேரள மாநில உயர் கல்வித்துறை மந்திரி டாக்டர் ஆர்.பிந்து கடிதம் எழுதினார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை செய்த புகாரின்பேரில் கொட்டாரக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவிக்கு நேர்ந்ததுபோல ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் நடந்துள்ளது.

இதுகுறித்து ‘நீட்’ தேர்வினை நடத்துகிற என்.டி.ஏ. என்னும் தேசிய தேர்வு முகமை ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது.

இந்தநிலையில் தற்போது பாதிப்புக்கு ஆளான மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த முடிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மறுதேர்வு வருகிற 4-ந் தேதி நடத்தப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “கொல்லத்தில் பாதிப்புக்குள்ளான மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடத்துவதற்கு என்.டி.ஏ. அனுமதி அளித்துள்ளது. கொல்லம் தவிர்த்து, ராஜஸ்தானில் 2 மையங்களிலும், மத்திய பிரதேசத்தில் 2 மையங்களிலும், உத்தரபிரதேசத்தில் ஒரு மையத்திலும் இந்த மறு தேர்வு நடத்தப்படுகிறது” என தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.