வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு, இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி சிறப்பு முகாம் நடைபெறு கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே, வார வேலை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தப்பணிகளை மேற்கொள்ள இயலாதவர்களுக்காக, நவ.12, 13 மற்றும் நவ.26, 27 ஆகிய இரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் முதல் கட்ட முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட முகாம் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதலே தமிழகத்தில் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்த முகாம் நடைபெறுகிறது.
நாளை முதல் டிச.8 வரை தாலுகா அலுவலகங்களிலும், இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்.
மேலும், தற்போது 17 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்க முடியும். 18 வயது ஆனதும், பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.