
சேலத்தை அடுத்து சென்னையில் இன்று நர்சுகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது. ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வும் கோரி உள்ளது நர்சுகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. முதலில் சேலத்தில் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நர்சுகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடுவது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்த நர்சுகள் அனைவரும் கடந்த ஆட்சியின் போது அவசரகால தேவைக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாத நிலையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அவர்களை பணி நீக்கம் செய்யாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.14 ஆயிரம் சம்பளத்தையும் ரூ.18 ஆயிரமாக அரசு உயர்த்தி அறிவித்தது. ஆனால் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையோடு போராடுகிறார்கள். போராடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அதேநேரம் உண்மை நிலையை அறிந்து போராட வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நர்சுகளின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை. இடஒதுக்கீடு விதிமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்? ஒப்பந்த நர்சுகள் தரப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டதாக போராட்ட களத்தில் பேசப்படுவதாக என் கவனத்துக்கு வந்தது. ஆனால் யாரும் என்னை சந்தித்து பேசவில்லை. ஆனால் அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி விசாரிக்க ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரித்து விதி முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த அரசு யாருடைய வாழ்க்கையோடும் விளையாடாது. விதிமுறைப்படி தேர்வு செய்யப்படாமல் பணி நீட்டிக்க விதி இல்லாமல் இருந்தும் அவர்களை பணியில் வைத்துக்கொள்ளவும், கூடுதலாக ரூ.4 ஆயிரம் சம்பளம் வழங்கவும் உத்தரவிட்டவர் தான் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.