பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? என கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று மாலையில் கன்னியாகுமரிக்கு வந்தார். கேரள கவர்னர் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? ஆவணப்படம் காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை மக்கள் சிலர் நம்புவதாக கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கவர்னர் ஆரிப்முகம்மது கான் ‘உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த மக்கள் பிபிசி செய்தி நிறுவனம் மிகவும் கவலைப்படுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை?. நமது மக்களில் சிலரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை அவர்கள் நம்புகின்றனர்’ என்றார். ”ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள தருணம் இது. ஆவணப்படத்தை வெளியிட ஏன் இந்த குறிப்பிட்ட தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டது? குறிப்பாக, நமது சுதந்திரத்தின் போது, இந்தியாவால் அதன் சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது, இந்தியா துண்டு துண்டாக உடைந்து விடும் என்று கணித்தவர்களிடம் இருந்து இந்த முயற்சி வந்துள்ளது” என்றும் கேரள ஆளுநர் கூறினார்.
2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானார். இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது.
இந்தியா: மோடிக்கான கேள்விகள், என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிபிசி ஆவணப்படம் குறித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளது முக்கிய செய்தியாக உள்ளது.