2023இல் 75 நாட்கள்.. மார்ச் 18 அன்று இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசியதில் இருந்து…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
2023இல் 75 நாட்கள் முடிந்திருக்கின்றன. நான் இந்த 75 நாட்கள் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். இந்த 75 நாட்களில் தேசத்தினுடைய, வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீன் பட்ஜட் வந்தது; இந்த 75 நாட்களில் கர்நாடகத்தின் ஷிவமொம்மாவிலே, விமானநிலையம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது; இந்த 75 நாட்களில் மும்பையில் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டம் தொடங்கப்பட்டது; இந்த 75 நாட்களில் தேசத்திலே உலகின் மிக நீண்ட ஆற்றுச் சுற்றுலாப் பயணம் நடந்தது; பெங்களூரு மைசூரூ விரைவுவழிச்சாலை தொடங்கப்பட்டது; தில்லி-மும்பை விரைவுவழிச்சாலை நீட்டிப்பு தொடங்கப்பட்டது; மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் பயணிக்கும் வந்தே பாரத் ட்ரயின்கள் ஓடத் தொடங்கின; ஐஐடி தார்வாடின் நிரந்தரமான வளாகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பாரதம் தனது அண்டமான் நிகோபார் தீவுக்கூட்டத்தின், 21 தீவுகளுக்குப் பரம்வீர் சக்ரம் விருது பெற்றோரின் பெயரிட்டது.
நண்பர்களே, இந்த 75 நாட்களிலே தான், பாரத நாடு, பெட்ரோலிலே 20 சதவீதம் எத்தனால் மதிப்புக்கூட்டலைச் செய்து, ஈ20 எரிபொருளை அறிமுகம் செய்தது. இந்த 75 நாட்களிலே, துமகுருவிலே ஆசியாவின் மிகப்பெரிய மிக நவீனமான, ஹெலிகாப்டர் தொழிற்சாலை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஏர் இண்டியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய, விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது. இந்த 75 நாட்களில் தான், பாரத நாடு, ஈ சஞ்சீவனி வாயிலாக, பத்துக்கோடி தொலைபேசிவழி ஆலோசனை என்ற இலக்கை எட்டியிருக்கிறது. இந்த 75 நாட்களில் தான் பாரதம், 8 கோடி புதிய குழாய்வழி குடிநீர் இணைப்புக்கள் இலக்கை எட்டியது. இந்த 75 நாட்களிலே தான் யுபி உத்தராகண்டில் ரயில் நெட்வர்க்கின், 100 சதவீதம் மின்மயமாக்கல் பனி முழுமையடைந்தது.
நண்பர்களே இந்த 75 நாட்களிலே, கூனோ தேசியப்பூங்காவிலே 12 புதிய வேங்கைகள் வந்து சேர்ந்தன. பாரதநாட்டுப் பெண்கள் அணி அண்டர் 19 போட்டியில் டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த 75 ஆண்டுகளிலே தேசம் 2 ஆஸ்கர்கள் வென்றதை சந்தோசமாகக் கொண்டாடியது.
நண்பர்களே இந்த 75 நாட்களிலே ஆயிரக்கணக்கான அயல்நாட்டுத் தூதர்களும், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜி 20 கூட்டங்களில் பங்கெடுக்க, பாரதம் வந்தார்கள். இந்த 75 நாட்களிலே, ஜி20யின் 28 முக்கியமான கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதாவது மூன்று நாட்களுக்கு ஒரு கூட்டம் என்ற வகையில். இந்த வேளையில் தான், எனர்ஜி சம்மிட்டும் நடந்தது. இன்றும் கூட, உலக அளவிலான சிறுதானிய மாநாடு நடந்தது.
நாமுமே பார்த்திருந்தோம், பெங்களூருவிலே நடந்த ஏரோ இண்டியாவிலே பங்கெடுத்துக் கொள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பாரதம் வந்தன. இந்த 75 நாட்களிலே தான், சிங்கப்பூரோடு சேர்ந்து யுபிஐ இணைப்புத் தொடங்கப்பட்டது. இந்த 75 நாட்களிலே தான் துருக்கிக்கு உதவும் வகையிலே பாரதம் ஆப்பரேஷன் தோஸ்தினைச் செயல்படுத்தியது.
இப்போதிலிருந்து சில மணிநேரம் முன்னர் தான், பாரத பங்களாதேசம் எரிவாயுக் குழாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த 75 நாட்களின் பட்டியல் என்பது மிக நீளமானது, முழுவதும் கூற நேரம் போதாது. மேலும் 75 நாட்களின் சில விஷயங்களை நான் ஏன் எடுத்துக் காட்டுகிறேன் என்றால், இது தான், இந்தியாவின் நேரம் என்பதன் பிரதிபலிப்பாகும்.