
ஐ.பி.எல் 2023 – ஏழாம் நாள் – 06.04.2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
ஐ.பி.எல் 2023 தொடரின் ஏழாம் நாளான நேற்று கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கொத்தா அணி வென்றது. கொல்கொத்தா அணி (204/7, ரஹ்மானுல்லா 57, ரிங்கூ சிங் 46, ஷர்துல் தாகூர் 68, உதிரிகள் 23, டேவிட் வில்லி, கரன் ஷர்மா தலா 2 விக்கட்) பெங்களூரு அணியை (17.4 ஓவரில் 123, கோலி 21, ப்லேசிஸ் 23, ப்ரேஸ்வெல் 19, டேவிட் வில்லி 20, ஆகாஷ் தீப் 17, வருண் 4/15, சுயேஷ் ஷர்மா 3/30, நரேன் 2/16) 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கொல்கொத்தா அணி அப்படியொரு மாற்றம் நிகழும் என நினைத்துக்கூடப் பார்த்திருக்காது. ஐந்து விக்கட் இழப்பிற்கு 89 ரன் என்ற இடத்தில் 12ஆவது ஓவரில் இருந்த அந்த அணி 20 ஓவரில் 204 ரன் கள் எடுத்தது என்றால் அதற்கு முழுக் காரணம் ஷர்துல் தாகூர் தான். கொல்கொத்தா அனியில் மொத்தமாக மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். 44 பந்துகளில் 54 ரன் அடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ், 33 பந்துகளில் 46 ரன் அடித்த ரிங்கூ சிங், 29 பந்துகளில் 68 ரன் அடித்த ஷர்துல் தாகூர்.
அடாவடி ஆட்டக்காரர்களான ரசல் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக மாறினார்; முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பெங்களூரு பந்துவீச்சாளர்கள் உதிரி ரன்களை வாரி வழங்கினர். 10 வைட், 3 நோபால், 6 லெக்பை, 4 பை என மொத்தம் 23 உதிரி ரன்கள். 20ஆவது ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது.
இலக்கு கடினமானதுதான் என்றாலும் விராட் கோலி, ப்ளேசிஸ் இருவரும் இருக்கும் ஃபார்முக்கு சுலபமாக அடித்துவிடுவார்கள் என நினைத்த நிலையில் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், சுயேஷ் ஷர்மா ஆகியோரின் சுழலில் சிக்கி பெங்களூர் அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது.
17.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அந்த அணியால் 123 ரன் களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கொத்தா அணியிடம் 81 ரன் கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.