வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைப்பு- இபிஎஸ் மீது வழக்கு..

Published:

500x300 1874146 14 - 2026
#image_title

வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைப்பு காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கலின்போது தன்னுடைய தேர்தல் பிராமண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட தி.மு.க முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2016-ம்ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பழனிசாமி, 2021 தேர்தலில் தனது சொத்து மதிப்பில் ரூ.1 கோடிக்கு மேல் குறைத்து காட்டியுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

எனவே சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்தப் புகார் மீதான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கை பொதுநல வழக்காக கருதி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை என்றும், இதனால் சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 125 ஏ தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது. 125 ஏ (1) பிரிவு 33 ஏ இன் துணைப் பிரிவு தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியது, 125 (2) தனக்குத் தெரிந்த அல்லது தவறானது என்று நம்புவதற்குக் காரணமுள்ள தவறான தகவலைத் கொடுப்பது. 125(3) பிரிவு 33-ன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அவரது வேட்புமனுத்தாளில் அல்லது 33 ஏ இன் துணைப்பிரிவு 2-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய அவரது வாக்குமூலத்தில், ஏதேனும் தகவலை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதனிடையே எடப்பாடி பழனிசாமி மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் வழக்குப்பதிவு செய்து தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினமும் ஒரே நாள் என்பதால் விவரங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படாததால் அடுத்த விசாரணை நாளான ஜூன் 6-ம் தேதி அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும், அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img