பிஎஃப் ஐ – நிர்வாகிகள் தொடர்புள்ள இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..

Published:

images 65 - 2026
#image_title

நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

அவரது செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்பில் உள்ளாரா என விசாரித்தனர். புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் வசித்து வந்த ரசாக், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதிக்கு குடியேறி உள்ளார்.

இதே போல், மதுரை நெல்பேட்டையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வங்கிக் கணக்கில் நிதி பரிமாற்றம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பழனியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரிடம் என்ஐஏ விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் அவர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதே போல் தேனி கம்பம்மெட்டுவில் சோதனையை முடித்து எஸ்டிபிஐ நிர்வாகி சாதிக் அலியை விசாரணைக்கு அழைத்து சென்றது என்ஐஏ. தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:- மதுரையில் ஏற்கனவே கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம். நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரிடம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

மதுரை மாநகரில் தெப்பக்குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img