
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கடந்த 3 நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மணிப்பூர் அரசு, மத்திய அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இழப்பீடு தொகை இறந்தவர்கள் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, மணிப்பூர் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் போக்குவரத்துகளை சீர் செய்யும் பணி நாளை முதல் தொடங்கும் என தெரிவித்தார்.
மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்த நிலையில், அந்த பிரச்னை கலவரம், வன்முறை என உருவெடுத்துள்ளது.
பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் முன்னேறிய வகுப்பினராக கருதப்படும் மொய்தீ இன மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தால், தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் என்பது அங்குள்ள நாகா, குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. மணிப்பூர் வன்முறையில் சுமார் 70 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.