சென்னை: கைத்தறி நெசவுத் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கைத்தறி நெசவாளர்கள் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கைத்தறி ஜவுளிகள் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அப்படி வரும் ஜவுளிகளுக்கு அரசு மானியம் சாதாரணக் காலங்களில் 20 சதவீதமும், விஷேசக் காலங்களில் 30 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சாதாரணக் காலங்களில் ரூ.100 ம், விஷேசக் காலங்களில் ரூ. 150 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மானியச் சலுகை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கச்சாப் பொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு போன்ற காரணங்களினால் ஜவுளிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அந்த உச்ச வரம்பை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும்; 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் அரசு மானியமாக உயர்த்த வேண்டும் அல்லது உச்சவரம்பு என்பதை தவிர்த்து விற்பனை செய்யப்படும் ஜவுளிகளின் தொகைக்கு முழு மானியம் கிடைப்பதற்கு அரசு ஆணைப் பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 1354 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு 2012 மார்ச் முதல் 2014 ஆகஸ்ட் வரை அரசிடம் இருந்து வர வேண்டிய தள்ளுபடி மானியத் தொகை சுமார் 300 கோடி நிலுவையில் உள்ளது. அதனால் ரிபேட் நிலுவைத் தொகைக் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கோ-ஆப் டெக்ஸ் துணிகளின் ரகங்களை கொள்முதல் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் வழக்கமாக நடைபெறும். எனவே இந்த கொள்முதல் தொடர்பாக கைத்தறி துறை அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் / மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டு முத்தரப்பு அலோசனைக் கூட்டம் நடக்க வேண்டும். பின்பு சங்கத் தலைவர்கள் எடுக்கும் முடிவின் படி ஜவுளி ரகங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தி திட்டம் அமைய ஆவண செய்ய வேண்டும். மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கும் டிசைன்கார்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளையும் உற்பத்தித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ வசதி, காப்பீடு, முதியோர் ஒய்வூதிய திட்டம் போன்ற அனைத்து வசதிகளும் முறையாக, தங்கு தடையின்றி, கால தாமதமின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் கிடைக்கும் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைப்பதற்கும் வழி வகுக்க வேண்டும். மத்திய அரசு வர்த்தக வங்கிகள் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் தொகையை ஒரு இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் வளரவும், சிறக்கவும்; தொழிலாளர்கள் நலன் காத்திடவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கைத்தறி நெசவாளருக்கு மானியத்துடன் கூடிய கடன் ரூ.1 லட்சமாக உயர்த்தப் பட வேண்டும்: ஜி.கே.வாசன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari