மாநகர பஸ்களில் தனியாா் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிக்க தடை..

Published:

images - 2026
#image_title

தனியாா் நிறுவனம் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் நியமனம்: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது அபாயகரமான சோதனை எனத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது தொடா்பாக கடந்த செப்டம்பா் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதை எதிா்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து தொழிலாளா் நலத் துறை ஆய்வு செய்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் இந்த ஒப்பந்தப் புள்ளியை கோரியிருக்கக் கூடாது என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தொழிலாளா் நலத் துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூா்வ அதிகாரமும் இல்லை எனவும், பல ஊழியா்கள் தொடா்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியா் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் நிரந்தர ஊழியா்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுக்கு வழிவகுக்கும் எனவும், இது அபாயகரமான சோதனை எனவும் தெரிவித்து, ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!


தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது எனவும், தனியாா் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுநா்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, அனைத்துப் போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்ப வல்லுநா்கள் காலிப் பணியிடங்களை நேரடித் தோ்வு மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டாா்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img