குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் மார்ச் 11 இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
இந்தச் சட்டத்தில், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் பிரிவினைவாதிகள், எதிர்க்கட்சிகளின் கைகள் இருந்தன. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள், எம்.பி., ஆகியோர் தில்லியில் இதன் பின்னணியில் இருந்து பெரும் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர்.
இதை அடுத்து அந்நேரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், புதிய விதிகள் வெளியிடப்படாததாலும் குடியுரிமை திருத்த சட்ட (சி.ஏ.ஏ.) மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இப்போது அமல்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ.,வில் வழிவகை இல்லை. அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர், புத்த மதத்தினருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.