
— பேராசிரியை லாரன் தகன் ஆமோஸ் —
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –
1950 ல் இஸ்ரேலிய பிரதமர் பென் குரியன் அப்போதைய இந்திய ராஜ்ஜிய நடவடிக்கைகளுக்கு அப்பால் நெடுநோக்குடன் இந்தியாவை பார்த்தார். இந்தியா எதிர்காலத்தில் ஒரு மகத்தான சக்தியாக உருவெடுக்கும். இன்று தூங்கிக் கொண்டிருக்கும் அது ஒரு நாள் விழித்தெழும். அப்போது புதிய சர்வதேச சட்டங்களும் முறைமைகளும் உருவாகும். அவ்வாறு இந்தியா விழித்தெழும்போது இஸ்ரேல் ஏற்கெனவே இந்தியாவின் முன்பு அங்கீகாரம் பெற்றதாக, புரிந்து கொள்ளப்பட்டதாக தன்னை முன்னிறுத்த வேண்டும் என அவர் விரும்பினார்.
இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தனது வரலாற்று பூர்வமான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு கதவை திறப்பதாக அது அமைந்தது. 1950ல் திறந்த அந்த கதவு 1992 வரையிலும் நீண்ட தாழ்வாரத்துக்கு வழிவிட்டது. பின்பு, 2017-ல் உறுதியான தளமிடப்பட்ட அது 2026 ல் பாதை திரும்பி, வளைந்து செல்வதாக உள்ளது.
1992ல் இந்தியா – இஸ்ரேல் இடையே முழுமையான ராஜ்ஜிய உறவுகள் நிலை பெற்றன. 2017ல் மோடி, முதன் முதலில், அதுவரை மூடிய கதவுக்குள் இருந்த உறவை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். ‘நிலைத்த உறவாக’ இருந்ததை 2026ல் உறுதியான லாபத்தை தரக்கூடிய முதலீடாக மாற்ற முயல்கிறார்.
இதுதான் அவரது சமீபத்திய இஸ்ரேல் விஜயத்தின் ஆழ்ந்த பொருள். இதுவரை தளவாடங்களை வாங்கும் உறவாக இருந்த நிலை மாறி, இனி அவ்வாறு இல்லாமல் வளர்ச்சி, உற்பத்தி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்று கூட்டாளியாக மாறக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இந்த மேம்பட்ட உறவு, விரிவான தளத்தில் ஏற்பட்டுள்ள புரிதல், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த ஒப்பந்த ஆவணங்களில், அதிகார பூர்வ மொழியில், வெளிப்பட்டுள்ளது.
இந்த கோணத்தை இஸ்ரேலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இஸ்ரேல் மீது ‘காதலில் விழுந்து விடவில்லை’. அதுவொரு வலிமையான கருவியை வளர்த்தெடுக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை பல்முனை அச்சுறுத்தலை (பாகிஸ்தான், சீனா, பயங்கரவாதம்) சந்தித்து வருகிறது. தேசம் இதை உறுதியாக எதிர்கொள்ள தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், உள்நாட்டில் உற்பத்தி, உளவு நுண்ணறிவு, சரியான தற்காப்பு என ஒருங்கே திரட்டி வருகிறது என்பதே அண்மைய பாடமாக உள்ளது.
அதனால்தான் மோடியும் அவரை சூழ்ந்து இருப்பவர்களும் ‘தளவாடங்களை’ வாங்குவது என்ற நிலையில் இருந்து போர்க் கருவிகளின் உற்பத்தி, உற்பத்தியை நிலைநிறுத்தல், மேம்படுத்துதல் என்று பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட கூட்டாளி என்ற நிலையை நோக்கி நகர்கிறார்கள். இந்த விஜயத்தின் போது பொதுவெளியில் சொல்லப்பட்ட பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒத்துழைப்பு என்ற வார்த்தைகளுக்கு பின்னணியில் இருப்பது மேற்சொன்ன விஷயம்தான்.
இதன் பிறகு தான் இஸ்ரேலியர்களுக்கு ஏமாற்றம் தரும் முரண்பாடு போல தெரியும் உண்மை வருகிறது. பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா அதே வேளையில் இஸ்ரேலுக்கு எதிராக ஐநா.,வில் ஓட்டளிப்பதும், சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்யும் அறிக்கைகளை ஆதரிப்பதும் ஏன்? என்று அவர்கள் மனதில் வினா எழுகிறது. இது கபடத்தனம் அல்ல, மாறாக இந்திய பாணியிலான சொற்சீர் பிரிப்பு என்பதுதான் பதில்.
இந்தியா பல தசாப்தங்களாக அணிந்து வந்த ‘பாலஸ்தீனிய முட்டாக்கு’ இஸ்ரேலுடன் வெளிப்படையான, முழுமையான உறவை மேற்கொள்ள முடியாதபடி தடுத்து வந்தது. இப்போதும் அந்தக் கொள்கை முட்டாக்கு முழுமையாக விலகவில்லை. இந்தியா தொடர்ந்து இரு-தேசம் என்ற தீர்வை முன்னிறுத்தி வருகிறது. 2026 பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பாக பார்த்தோமானால் அவரது வருகைக்கு ஒரு வாரம் முன்பு மேற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்குவதாகக் கூறி அதை கண்டனம் செய்யும் ஐநா., அறிக்கையை இந்தியா ஆதரித்தது.
இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொள்கை உரையாடல் என்பதை ‘சித்தரிப்பு உரையாடல்’ என்ற சொல்லால் பதிலீடு செய்ய வேண்டும். இந்தியா தனது மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் இயங்கு முறையை மாற்றிக் கொண்டுள்ளது.
இஸ்ரேலை ‘பாலஸ்தீனியர்’களுடன் வலுக்கட்டாயமாக பிணைத்துப் பார்க்கும் நிலைப்பாட்டை இரு நாடுகளிடையான உறவுகள் விஷயத்தில் பிரித்துப் பார்க்கிறது இந்தியா. சர்வதேச அரங்கில் தெற்குலகின் குரலாக, சர்வதேச மனசாட்சியின் குரலாக எதிரொலிக்கிறது. இதன் மூலம் அரபு நாடுகள், முஸ்லிம்கள் மூலம் ஏற்படும் அரசியல் பாதிப்புகளை குறைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அதற்கு இணையாக, ‘ஐநா., வளையத்துக்கு அடியில்’ இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், தொழில் துறை, புதிய கண்டுபிடிப்புகள் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சொல்லாடல் அது.
இது அயலுறவில் மட்டும் அல்ல. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சிக்கலானது. அங்கு முஸ்லிம் மக்கள்தொகை அதிகம். ‘குறிப்பிட்ட ஒரு முகாமைச்’ சார்ந்தவர் என்று இல்லாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் என்பதற்கு அங்கு கடுமையான போட்டி உள்ளது. வேறு விதமாக சொல்வதானால், வேற்றுமைகளை உள்ளிழுத்து தன்வயமாக்கிக் கொள்ளும் தன்மையை இந்தியா உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.
அது இஸ்ரேலிடம் இப்படி சொல்லக்கூடும்: பயங்கரவாதத்திற்கு எதிராக, அந்த எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதில் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். அதே மூச்சில், சர்வதேச சமுதாயத்திடம்: ஒருதலை பட்சமாக எல்லையை விரிவாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லும். இது இரு தரப்பையும் மென்மைப்படுத்தும் நிலைப்பாடு அல்ல. மாறாக இன்னல்களை தவிர்க்கும் நிர்வாகவியல்.
இஸ்ரேல் தன் தரப்பிலிருந்து எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘எல்லா சூழ்நிலையிலும் ஆதரிப்பதை’ எதிர்பார்க்கும் இஸ்ரேலியர்கள் வருத்தமடையக் கூடும். மாறாக இந்தியா என்னும் வலிமையான சக்தி தன் செயல் அரங்குகளை பல்வேறாகப் பிரித்து, தன்னுடைய நலனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று பார்ப்பவர்கள் இதை நல்வாய்ப்பாகக் கருதுவார்கள். நல்ல வாடிக்கையாளர் என்ற நிலையிலிருந்து உற்பத்தி – தொழில்நுட்ப துறையில் கூட்டாளி என்ற நிலைக்கு மாறுவது நல்லதொரு வாய்ப்பு. ஏனெனில் இஸ்ரேல் அந்த துறையில் வலிமையாக இருக்கிறது.
பல்லடுக்கு வான் பாதுகாப்பு, டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போர்த் திறன், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நுண்ணறிவு, சைபர் நுண்ணறிவு , சமூக கண்டுபிடிப்புகளை பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் இந்தியா ‘பசி’யோடு இருக்கிறது. சமீபத்திய விஜயம் இதைதான் சொல்லுகிறது. சம்பந்தமே இல்லாத தனித்தனியான நடவடிக்கைகளை அல்ல, ஆழமான ஒத்துழைப்புக்கான எல்லைகளை விரிவாக்குகிறது.
இங்குதான் 1950- 2026 வட்டம் முழுமை பெறுகிறது. இங்குதான் பென் குரியனின் புரிதல் வெளிப்படுகிறது. எதிர்கால சக்திகளுடன் முன்னமே தொடர்பில் இருப்பவர்களுக்கு காலம் உதவி செய்யும் என்று அவர் கூறுவார். மோடி அந்தக் கூற்றை மெய்ப்பிக்கிறார். இஸ்ரேல் மீதுள்ள காதலால் அல்ல, இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது இந்தியாவை மேலும் பன்மடங்கு வலிமையுள்ளதாக்கும் என்ற யுக்தியினால்.
இஸ்ரேலும் தன் பங்கிற்கு எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் இந்த வரைபடத்தை படிக்க வேண்டும். இரண்டு தேசம் என்ற கருத்தை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். ஐநா மூலமாக இந்தியா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் நமக்கு உவப்பாக இருக்காது. ஆனால் நாம் சரியான முறையில் பேசினால் , தொழில்துறையில் தொழில்நுட்பத் துறையில் வலிமை என்ற மொழியில் பேசினால் , அரசியல் ரீதியான அழுத்தங்களை மீறி ஒத்துழைப்பை ஆழப்படுத்தலாம். கூட்டாளியை காணலாம்.
2026 விஜயத்தை இஸ்ரேல் இந்த தருணத்தின் உச்சமாக மட்டுமே கருதாமல் நிரந்தரமான மாற்றத்திற்கு வித்திட நினைத்தால் அது இந்தியாவில் திட்டங்களை நிறைவேற்றுவதுடன் நின்று விடக்கூடாது. மாறாக நிலைத்த ஒத்துழைப்புக்கான செயல்முறைகளை, கட்டமைப்புகளை , கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். புதுதில்லி தன் மக்களுக்கு, நாம் ‘பக்க சாய்வு’ இல்லாமலே இவ்வளவு விஷயங்களை பெற்றிருக்கிறோம், சாதித்து இருக்கிறோம் என்று வெளிப்படையாக காட்டும்படியாக அவை அமைய வேண்டும்.
இது சமரசம் அல்ல. தனக்கேவுரிய வகையில் உலக கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வலிமையான சக்தியுடன் நாம் உறவாடுவதற்கான ஒரே வழி.
நன்றி: கார்டியன் நாளேடு
கட்டுரையாளர் இஸ்ரேலில் ரமத்கானில் உள்ள பார் – இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார்.



