சென்னை: அரசின் உத்தரவுப் படி மதப் பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டேன்; ஆனால் இது என் தனிப்பட்ட உரிமை, இனி இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மதப் பிரசங்கங்கள் செய்வேன் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார். அங்கீகரிக்கப்படாத கிறிஸ்துவ சபைகளில் சென்று மத பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு தடை விதித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘‘நீங்கள் மத பிரசாரம் செய்த இடத்தில், போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் அளவுக்கு அமைதி குலைவு ஏற்பட்டது. எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 24, 25, 26-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு பிரசாரம் அல்லது பிரசங்கத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியிருந்தார். இதை அடுத்து, தாம் அந்த பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், ரத்து செய்துவிட்டதாகவும் உமாசங்கர் கூறியுள்ளார். இது குறித்து உமா சங்கர் கூறிய கருத்து வருமாறு:- இறைப்பணி குறித்து இயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது. எனவே இறைப்பணியை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து எனது பிரசங்கங்களை ரத்து செய்திருக்கிறேன். அதுவும் அரசு உத்தரவுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று இயேசு கூறியுள்ள கட்டளையின் அடிப்படையில் இதை செய்துள்ளேன். வரும் மாதங்களில் எனக்கு கூட்டங்களில் பேச அழைப்புகள் உள்ளன. தனிப்பட்ட நபர் என்ற முறையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எங்கு செல்கிறேன், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேல் நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனக்கு இருக்கும் தனிப்பட்ட உரிமை. எனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னை ‘வா மகனே’ என்று அழைத்தவர் இயேசு. எனவே அவரை நான் எனது கடவுளாக ஏற்றுக்கொண்டேன். என்னை யாரும் மதம் மாற்றவில்லை. எனவே மத மாற்றம் என்ற குற்றச்சாட்டு போலியானதுதான். நான் மதத்தை பற்றி பிரசாரம் செய்யவில்லை. எனக்கு மறுவாழ்வு கொடுத்த இயேசு பற்றித்தான் பேசுகிறேன். அப்படி நான் கூறும்போது மக்கள் பலருக்கு வியாதிகள் குணமாகின்றன. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா இழுப்பு நோய் மேஜிக் போல குணமாகின்றன. பிள்ளையற்றவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கோ-ஆப்டெக்சில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண் தெரியாமல் இருந்த ஒருவருக்கு ஜெபித்த போது உடனே அது குணமாகிவிட்டது. நான் மத மாற்றம் செய்யவில்லை, மத பிரசாரமும் செய்யவில்லை. நான் இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறேன். 99.99 சதவீதம் கிறிஸ்தவர்கள் மத்தியில்தான் நான் பேசுகிறேன். நான் இனிமேல் இந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பேசுவேன். அதுவும் எனது உரிமை. ஒருவர்கூட கேள்வி கேட்க முடியாது. -என்று அவர் கூறினார்.
‘‘இந்து, இஸ்லாமியர் மத்தியிலும் மதப் பிரசங்கம் செய்வேன்’’: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari