புதுதில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பு என்று யாரும் கருதக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தில்லியில் நடைபெறுவது மாநிலத் தேர்தல். அங்கு பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடவில்லை. தில்லி தேர்தலில் முதல்வர் யார் என்பதையே தில்லி மக்கள் முடிவு செய்யப் போகிறார்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கப் போவது பிரதமரை அல்ல. தில்லியில் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டிதான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில், மோடி அரசின் செயல்பாட்டை வைத்துதான் மக்கள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை அளித்தார்களா? அதுபோல், மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத முடியாது… என்று கூறினார்,

