என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி: மு.க. ஸ்டாலின்

சற்றுமுன்

சென்னை :

என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்!

பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிடுவது எல்லாம் அவரது சொந்தக் கருத்துக்கள்தானா என அவர் விளக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின், ”எனது பேஸ்புக் பக்கத்தை முதல்வர் தொடர்ந்து பார்ப்பதற்கு நன்றி. தொடர்ந்து என் பக்கத்தை பார்த்து, அதில் நான் பதிவு செய்து வரும் மக்களின் பிரச்னைகளை, தேவைகளை, குறைகளை முதல்வர் தெரிந்து கொள்ளட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்ட மன்றத்தில் செப்.22 நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, “தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் திரித்து கூறி வருகிறார். உண்மையில் அது அவரது கருத்துக்கள்தானா என்பதை அவர் விளக்க வேண்டும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வாழ்த்து கூறி இருந்தார். பின்னர் அது அவரது கருத்து இல்லை, ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தை பராமரிப்பவர்கள் வெளியிட்டது என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

சட்டசபையில் முதல்வர் கூறிய கருத்துக்கு பேஸ்புக்கில் பதிலளித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், ” தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்களை மறுத்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தப் புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. ஆகவே அந்தப் புள்ளி விவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணிணி மூலம் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் செல்லும் “நமக்கு நாமே” பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதலமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

முதலமைச்சரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.