தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வருவாயை தணிக்கை செய்ய ராமதாஸ் கோரிக்கை

Published:

சென்னை

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை…

அரசு அங்கீகாரத்துடன் பகல் கொள்ளை அடிக்கப்படுவதற்கு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு எந்த சட்டத்தையும் மதிக்காமல் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையை நடத்தி வருகின்றன தனியார் சுங்கச்சாவடிகள்.

விரைவான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்குடன் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தங்க நாற்கர சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி சென்னை & கன்னியாகுமரி, சென்னை & பெங்களூர் உள்ளிட்ட சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன. இந்த சாலைகளை பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் மொத்தம் 40 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடக்கத்தில் சுங்கக்கட்டணம் குறைவாக இருந்ததாலும், நெடுஞ்சாலைகளில் வேகமாக பயணம் செய்ய முடிவதால் பயண நேரம் குறைந்ததாலும் சுங்கக்கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினர். ஆனால், ‘‘சுமை கால் பணம்… சுமை கூலி முக்கால் பணம்’’ என்பதைப் போல கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரணூரில் உள்ள சுங்கச்சாவடியை குறிப்பிடலாம். இந்த சுங்கச் சாவடி வழியாக நாள்தோறும் குறைந்தது 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் தன்மையைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.215 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வாகனத்திற்கு ரூ. 70 வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு ரூ. 63 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.286.80 கோடி கிடைப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ரூ.2868 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இச்சுங்கச்சாவடிக்குட்பட்ட சாலையின் நீளம் 90 கி.மீ. ஆகும். இச்சாலையை அமைக்க செய்யப்பட்ட முதலீடு ரூ.80 கோடி மட்டுமே. ஆனால், 10 ஆண்டுகளில் அதை விட 36 மடங்கு அதிக வருவாயை இந்த சாலையை அமைத்த நிறுவனம் ஈட்டியிருக்கிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தனியார் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்கான முதலீடு எடுக்கப்பட்டுவிட்டால், அதன்பின் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் முதலீட்டைவிட 36 மடங்கு லாபம் ஈட்டப்பட்ட பிறகும், வழக்கமான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் மட்டும் தான் இப்படி நடக்கிறது என்று கூற முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் நடக்கும் பகல் கொள்ளைக்கு இது ஓர் உதாரணம் என்று தான் கூற வேண்டும்.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், வருவாயைக் குறைத்துக் காட்டி, தொடர்ந்து முழுமையான சுங்கக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இந்த மோசடிக்கு மத்திய அரசும் உடந்தையாக உள்ளது. இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும், அவை வாங்கப்படும் போதே வாழ்நாள் முழுமைக்குமான சாலைவரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மீது சாலைப் பராமரிப்புக்காக ரூ.2 கூடுதல் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதற்குப் பிறகும் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த சட்ட விரோத செயலையே பகல் கொள்ளையாக மாற்றியிருப்பதை மன்னிக்க முடியாது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். ஏதேனும் நெடுஞ்சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img