தாயை நினைத்து கண்கலங்கிய மோடி: பேஸ்புக் தலைமையகத்தில் உணர்ச்சிப் பெருக்கு

Published:

தாயைக் குறித்து தனது பேச்சில் நினைவுகூர்ந்த மோடி, தாம் பேசும்போது உணர்ச்சிப் பெருக்கால் கண் கலங்கினார். அந்த ஓரிரு நிமிடங்கள் பேஸ்புக் தலைமையகத்தில் நிசப்தம் நிலவியது.

நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு கலிபோர்னியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே மென்லோ பார்கில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அங்கிருந்தவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி.

அவருடைய பேச்சின் நடுவே சிரிப்பு, நகைச்சுவை, யதார்த்தமான உரையாடல் என எல்லாவற்றையும் காண முடிந்தது.

நாட்டின் வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், கிராமங்களை இணைப்பது, நாட்டின் வெளிப்படையான நிர்வாகம் இவை குறித்தெல்லாம் தனது பேச்சில் குறிப்பிட்டார் மோடி.

குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலம், தம்மால் மக்களுடன் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிவதாகவும், மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் இது அவசியம் என்றும், மக்களின் கருத்துகளை தம்மால் உடனுக்குடன் அறிந்து செயலாற்ற முடிவதாகவும் குறிப்பிட்டார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

பெண்கள் , குழந்தைகள் குறித்த ஒரு பெண்மணியின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, எல்லா நாட்டிலும் கடவுளை ஆணாக வைத்திருக்கும் போது, நம் நாட்டில் மட்டுமே பெண் தெய்வங்களை வைத்திருக்கிறார்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மா என்று தெய்வம் பெண்ணாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

தனது பெற்றோர், குறிப்பாக அம்மாவும் மோடியின் இந்த உரையாடலைக் கேட்க பேஸ்புக் தலைமையகமான இங்கே வந்திருப்பதாக மார்க் குறிப்பிட்டார். உடனே அவர்களை எழுந்து எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டார் மோடி. அவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொன்ன பின்னர், மோடியின் தாயார் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு மார்க் கேட்டுக்கொண்டார்.

அப்போது, 95 வயதாகும் தனது தாயார் ஹீராபென்னை நினைவுகூர்ந்த மோடி, தனது தாய் தன்னை வளர்த்த விதம், அவர் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறும் போதே உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார். தான் சிறு வயதாக இருந்த போது, தாயார் வீட்டு வேலைகளைச் செய்து தன்னை வளர்த்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு பேசும் போது கண்கலங்கிய மோடி, மேற்கொண்டு சில நொடிகள் எதுவும் பேச முடியாமல், சிறிது நேரம் மவுனமாக இருந்தார். தொடர்ந்து, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய மோடி, இது நரேந்திரமோடிக்கு மட்டுமானதல்ல, இந்தியாவில் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் கனவுகளை நனவாக்க,  தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்கின்றனர் என்றார் மோடி.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மோடியின் உணர்ச்சிப் பெருக்கான உரையால், பேஸ்புக் அலுவலகத்தில் ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

நான் நாட்டுக்காக உழைக்கிறேன். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன். இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும் உறுதியுடனும்  உற்று நோக்குகிறது என்று கூறி  விடைபெற்றார் மோடி.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img