மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 5 பேருக்கு மரண தண்டனை

Published:

மும்பை:

கடந்த  2006ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என 12 பேர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இன்று இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஹ்தே ஷாம் சித்திக்கி, நவீது கான், ஆசிப் பஷீர் கான் ஆகிய ஐவருக்கும் கொலை செய்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்காக யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு 16-ன் கீழும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கமல் அகமது அன்சாரி (37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் ஷேக் (36), எஹ்தே ஷாம் சித்திகி (30), முகமது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27), சொஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 12 பேரும் முன்னர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினருடன் (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மும்பையில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர்; 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே அறிவித்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி முன் தனித்தனியே ஆஜரான குற்றவாளிகள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தங்களது குடும்பச் சூழ்நிலைகளையும், ஏற்கெனவே சிறையில் கழித்த காலங்களையும் கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் தரப்பு வாதங்களும், அரசுத் தரப்பு வாதங்களும் அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன. குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் சிறையும் விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், தண்டனை மீதான உத்தரவை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி ஷிண்டே கடந்த வாரம் தெரிவித்தார். அதன்படிதண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img