லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் கோரிக்கை

சற்றுமுன்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர், துறைமுக ஊழியர்களோடு சேர்ந்து சில இடங்களை சுத்தம் செய்தார். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழியை ஏற்று அதனை கடைபிடிக்க வேண்டும். நமக்கு மகாத்மா காந்தி வழிகாட்டியாக உள்ளார். இந்தியா தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பிரதமர் தூய்மை இந்தியா திட்டதை தொடங்கி வைத்து உள்ளார். அதனை 125 கோடி மக்களும் கையில் எடுத்து செய்ய வேண்டும்’’ என்று கூறினார் .
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக இலங்கை பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண மீனவர்கள், அரசுக்கு அவகாசம் தர வேண்டும். அதுவரை மீனவர்கள் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும். தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க தயாராக உள்ளோம். இலங்கை அரசு முடிவை தெளிவாக கூறவேண்டும்.

நாடு முழுவதும் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு நிதி ஆதாரம் அவசியம். இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மக்கள் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். கட்டணத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை மாற்றம் செய்ய ஆய்வு செய்து வருகிறோம், அதற்கு அவகாசம் தேவை. எனவே லாரி உரிமையாளர்கள் மக்கள் நலனை கருதி போராட்டத்தை கைவிட வேண்டும்.

கடற்கரை கிராமங்களை இணைத்து 200 சிறிய துறைமுகங்கள், பெரிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சில சிறிய துறைமுகங்கள் பெருந்துறைமுகங்களாக மாறுகின்றன. அதில் குளச்சல் துறைமுகமும் ஒன்றாகும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.