யமஹாவில் பெண்கள் ராஜ்ஜியம்

Published:

பெண்களைக் கொண்டாடும் நிறுவனங்களில் யமஹா முன்னணியில் இருக்கிறது. வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெண்கள் தலைகீழாய் தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க சென்னையில் இருக்கும் யமஹா நிறுவனம் 50 சதவீதத்திற்கும் மேலாக பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமஹா சென்னையை அடுத்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் எனுமிடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரு நிறுவனத்தை அமைத்திருக்கிறது. இந்நிறுவனம் ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கியிருக்கும் மூன்றவாது நிறுவனம் இதுவாகும்.

இந்தியாவில் ஏற்கெனவே உள்ள இரண்டு ஆலைகளை விட இது மிகவும் பெரியது. மற்ற இரண்டு ஆலைகளை விட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த ஆலையின் செயல்பாடு சமீபத்தில் தொடங்கப்பட்டாது.

இந்த ஆலையின் செயல்பாடு, உற்பத்தி, எதிர்காலத் திட்டங்களை குறித்து யமஹா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தகாஷி டெரபாயஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆலை 109 ஏக்கரில் அமைந்துள்ளது. இது ஒரு ஆண்டுக்கு 4.5 லட்சம் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தற்போது இங்கு 2 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் பாதி பேர் பெண்கள். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிளையும் ஸ்கூட்டரையும் தயாரிக்கிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் 9 நிறுவனங்கள் இந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இவை 68 ஏக்கரில் அமைந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 650 கோடியை முதலீடு செய்துள்ளன. இவற்றில் 1,300 பேர் பணிபுரிகின்றனர்.

தயாரிப்பு ஆலையும், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆலையும் ஒருங்கே அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். சூரிய மின்னாற்றல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மேற்கூரை, ஒரு சொட்டு நீர் கூட விரயமாகாத பயன்பாடு ஆகியன இந்த ஆலையின் சிறப்பம்சங்களாகும்.

யமஹா ஆலையிலிருந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு ஸ்கூட்டர் வெளி வருகிறது. யமஹா நிறுவனத்தின் மற்ற இரு ஆலைகளின் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 70 சதவீத உற்பத்தி பங்களிப்பை அளிக்கிறது சென்னை ஆலை. யமஹா ஆலையின் உற்பத்தித் திறன் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்தப்படும். அப்போது மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் தகாஷி டெரபாயஷி. எனவே மேலும் ஆயிரம் பெண்களுக்கு வேலை நிச்சயம் யமஹா ஆலையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்த ஆலையில் தற்போது பாசினோ ஸ்கூட்டர்களும், சல்யூடோ எனும் மோட்டார் சைக்கிள்களும் தயாரா கின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமுள்ளதாக அவர் கூறுகிறார். சீறிப்பாயும் வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதன் தயாரிப்புப் பின்னணியில் பலரது உழைப்பு குறிப்பாக பெண்களின் உழைப்பு உள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கலாம்.

நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை விட, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ள பெண்களைக் கொண்டாடும் யமஹா நிறுவனத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img