சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: ?

சற்றுமுன்

அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி சந்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 காய்கறி உற்பத்திக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு அடுத்த படியாக, மிகப் பெரியது திண்டுக்கல் காந்தி சந்தை. தற்போது 365 கடைகள் இங்கு செயல்பட்டு வந்தாலும் 160 கடைகள் மார்க்கெட்டுக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காந்தி சந்தை பகுதியில், சிறைச்சாலை, வட்டாட்சியர் அலுவலகம், மேல்நிலைப் பள்ளி, கோட்டை மாரியம்மன் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பூங்கா போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளதால், அதிகமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சேறும், சகதியுமான இடத்தில் விற்பனை:திண்டுக்கலில் சிறிது நேரம் மழை பெய்தாலும், மார்க்கெட் பகுதி சகதியாக மாறி விடுகிறது. இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளே நுழைய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனிச் சாலையில் உள்ள லாரி பேட்டைக்கு சந்தையை இடம் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பல மாதங்களுக்கு பின்னும், இதுவரை இடம் மாற்றம் செய்யப்பட வில்லை. அதே போல், காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

 இதுகுறித்து  வியாபாரிகள் சங்கத் தலைவர் துரை.சம்பத்திடம் கேட்ட போது:

 நாளொன்றுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் காந்தி சந்தை மூலம், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. லாரி பேட்டையில், 350 கடைகள் அமைக்க இடவசதி இல்லை. மேலும், அந்த இடத்தில் சந்தை அமைந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே புறநகர் பகுதியில் இடம் வழங்கினால், அங்கு செல்ல தயாராக உள்ளோம் என்றார்.

ஆணையர் நா.மனோகர்: லாரி பேட்டை பகுதியில், வியாபாரிகளுக்கு குறைந்த பட்ச இடம் வழங்க முடியும். அதனைவிடுத்து, ஒவ்வொருவரும் தேவைக்கு ஏற்ற இடம் கேட்பதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறை போன்ற கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது.

லாரி பேட்டைக்கு மாறினால், சேற்றில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படாது என்பதை வியாபாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.