எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்

சற்றுமுன்

சென்னை:
எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான டிசம்பர் 24 அன்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துவதுடன், உறுதி மொழியும் எடுத்து வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்த உள்ளார். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-ஆவது ஆண்டு நினைவு நாளான வருகிற 24-ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதைத்தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளும், அமைச்சர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.