தெலுங்கானா முதலமைச்சர் மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து : பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து

 
 
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 4 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 
இந்த தீவிபத்து காரணமாக, இன்று யாகத்தில் பங்கேற்பதாக இருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
 
மெடக் மாவட்டத்தின் எர்ரவெல்லி கிராமத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு உள்ளது. அவரது பண்ணை வீட்டில் “அயுதசண்டி மஹா யாகம்’ புதன்கிழமை தொடங்கியது. இந்தயாகம், உலக அமைதி வேண்டி நடத்தப்படுகிறது. மஹாயாக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் முதன்மை யாகப் பந்தலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
 
தெலுங்கானாவில் நடத்தப்படும் இந்த யாகத்திற்கு மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு உள்ளது. கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டது.
 
மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்கள் நீடித்துவரும் நிலையில் இவ்வளவு செலவில் யாகம் நடத்துவதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. விபத்து தொடர்பான முழு தகவல்கள் வெளியாவில்லை என்பது குறிப்பிடதக்கது.