கஜா புயல் நிவாரணம்… சினிமா நடிகர்கள் செய்த உதவிகள்…!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

01 Auguest 01 actor vijay - 2026

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல் சீற்றம்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ( சார்ஜிங் டார்ச்லைட், தென்னை – பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தார் கஜா புயல் நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளருமான ராஜசேகர பாண்டியன் ட்வீட் செய்துள்ளார். அதை நடிகர் சூர்யா சிவகுமார் ரீடிவீட் செய்துள்ளார்.

அதன்படி, நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா சார்பாகவும், 2 டி என்டர்டெய்ன்மென்ட் சார்பாகவும் கஜா புயல் நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் நன்கொடையை அரசு சாரா அமைப்புக்களின் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மக்களுக்காக பிரார்த்திப்போம், கைகோர்ப்போம் உள்ளிட்ட ஹேஸ் டேக்குகளுடன் அந்த டிவிட்டர் பதிவு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.