இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அர்தேந்து பூஷண் (ஏ.பி.)பரதன் (வயது 92 ) தில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 02-12-2016 உடல்நிலை மிகவும் மோசமடைந்தது காலமானார்.
ஏ.பி. பரதனுக்கு, கடந்த 7ஆம் தேதி திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏ.பி.பரதனுக்கு அசோக் என்ற மகனும், அல்கா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி, கடந்த 1986-ஆம் ஆண்டில் மரணமடைந்து விட்டார்.
ஏ.பி.பரதன், தேசிய அரசியலில் வருவதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வியாபாரிகள் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், அந்த மாநில இடதுசாரித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் உருவெடுத்தார்.
தேசிய அரசியலுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வந்த ஏ.பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மேலும், இந்திரஜித் குப்தாவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தார்.
ஏ.பி.பரதனின் உடல் தகனம், திங்கள்கிழமை (ஜன.4) நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.