கூடுதல் நிவாரண நிதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்தியக் குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினரிடம், நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மேலும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், “வெள்ள நிவாரண-சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.25,912 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இதையடுத்து, உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட வருகை தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

முதல்வர் அவர்களிடம் பேசியபோது…

“பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழை ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நவம்பர் மாத இறுதியில் மத்தியக் குழுவினர் வந்தனர். இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் வரலாறு காணாத கன மழை பெய்தது. அதில், சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போர்க்கால அடிப்படையில்…: உடனடியாக மீட்பு-நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மிகப்பெரிய அளவில் சொத்துகளுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

டிசம்பரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு துணை அறிக்கையை தயார் செய்து அளிக்கும் என்று சென்னைக்கு டிசம்பர் 3-இல் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 22-ஆம் தேதியன்று துணை அறிக்கையும் அளிக்கப்பட்டது.

வெள்ளப் பாதிப்புகளை, தாற்காலிக, நிரந்தர அடிப்படையில் மீட்பு-சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.17 ஆயிரத்து 431 கோடியே 51 லட்சம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. முதலில் அளிக்கப்பட்ட அறிக்கையில் மீட்பு-நிவாரணப் பணிக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனக் கோரப்பட்டிருந்தது. எனவே நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் ரூ.25,912 கோடி தேவை.

மழை-வெள்ள பாதிப்பை “கடுமையான இயற்கை பாதிப்பு’ என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கும், மீண்டும் மத்தியக் குழுவை அனுப்பி வைத்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போதை நிலையில், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் நிதி ஆதாரங்களைத் தாண்டி, கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே, இதற்கான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் விரைந்து அளிக்க வேண்டும்…

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.