குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கடும் தண்டனை: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி;

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரத்தில், குழந்தை என்ற சொல்லுக்கு வரையறை செய்யுமாறும் அது வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவும், கடுமையான தண்டனை வழங்கவும்  நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய உச்ச நீதிமன்ற மகளிர் வழக்குரைஞர் சங்க பொதுச் செயலாளர் பிரேரணா குமாரி, இதுபோன்ற குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம்தான் சரியான தண்டனையாக இருக்கும். பாலியல் வன்முறை தொடர்பான சட்டத்தில், குழந்தைகளின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதலுக்குக் கூட, பொதுவான பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கே இருக்கின்ற அரசியல் சாசனப் பிரிவின் கீழ்தான் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.