spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ரஃபேல் போர் விமான விவகாரம்! நடந்தது என்ன? நடப்பது என்ன?!

ரஃபேல் போர் விமான விவகாரம்! நடந்தது என்ன? நடப்பது என்ன?!

- Advertisement -

கார்கில் யுத்தத்தின் போது பிரான்ஸ் நாட்டின் உதவியோடு தான்  அப்போதிருந்த மிராஜ் விமானங்களில் இஸ்ரேல் மற்றும் ரஷ்யா விலிருந்து வாங்கிய பல்வேறு போர் உபகரணங்களை பொருத்தி அதன் மூலம் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினரை தாக்கி விரட்ட முடிந்து வெற்றி பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நவீன தொழில்நுட்பம் பெருகிய நிலையில்    30 வருடங்களாக நம் விமானப்படை விமானங்களில்  மாற்றங்கள் இல்லாத நிலையிலும், நம் அண்டைநாடுகள் தங்களின் விமானப்படைகளில் செய்து வரும் மாற்றங்களை கருத்தில் கொண்டும் புதிய தொழில் நுட்பத்தோடு கூடிய அதிநவீன போர் விமானங்களை நம் விமானப்படை பெறுவது இன்றியமையாதது என்று கருதிய அன்றைய பிரதமர் அடல்  பிகாரி வாஜ்பாய் அவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில், இந்தியாவிடம் உள்ள போர் விமானங்கள் காலத்திற்கேற்ற தொழிநுட்ப வசதிகளை பெற்றிருக்கவில்லை என்ற அடிப்படையில், அதி நவீன போர் விமானங்களை நம் நாட்டின் பாதுகாப்பு கருதி விமானப்படையில் சேர்க்க வேண்டும் என்ற முடிவினை இந்திய விமான படை கேட்டுக் கொண்டதன் பேரில் புதிய போர் விமானங்களை விமான படையில் சேர்க்க வேண்டுமென விரும்பினார்.

ஒற்றை விற்பனையாளர் ஒப்பந்தப்புள்ளி  முறையை மாற்றியமைத்து பல விற்பனையையாளர்கள் ஒப்பந்தப்புள்ளி  முறையை புகுத்துவதன் மூலம் மட்டுமே இது போன்ற கொள்முதல்களில்  ஊழலை ஒழிக்க முடியும் என்று கொள்கை முடிவை எடுத்து, அது குறித்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றது.

ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்ட நிலையில், ஆகஸ்ட் 2007ம் வருடம் இந்திய விமான படையின் அழுத்தத்திற்கு செவி சாய்த்து காங்கிரஸ் அரசு ஆறு சர்வதேச நிறுவனங்களிடம் விமானங்கள் வாங்குவதற்கான திட்ட அறிக்கையை கேட்டு கொண்டது. அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின், லே, ஜெய்சால்மர், பெங்களூரு போன்ற பல சீதோஷ்ண நிலைகளை கொண்ட இடங்களில் கள சோதனையை மேற்கொண்டன.

இந்த சோதனையின் முடிவில் நான்கு வருடங்களுக்கு பிறகு யூரோ ஃபைட்டர் டைஃபூன், மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே நாம் எதிர்பார்த்த தொழில் நுட்ப அம்சங்களை கொண்டிருந்ததால் தேர்வு பெற்றன. இந்த போர் விமானங்களின் விலை மட்டுமே பிரதானமல்ல. அந்த விமானத்தின் சேவைகள், பராமரிப்பு மற்றும் அதிக நாள் இந்த விமானம் நீடித்து உழைப்பதற்கான மேம்பாடான தொழில் நுட்பம் போன்றவைகளே முக்கியமானவை.

ஏனென்றால் இதற்கு முன்னர் நமது விமானப்படை வைத்திருந்த சில குறிப்பிட்ட நிறுவனத்தின் விமானங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பட்டு செலவுகள்  கொள்முதல் விலையை விட அதிகம் என்பதால் அனைத்து முக்கிய அம்சங்களையும் கவனத்தில் கொண்டே போர் விமானங்களை வாங்க முடியும்.

ஆனாலும், 2012ம் ஆண்டு, டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ரபேல் விமானம்  யூரோ ஃபைட்டர் டைஃபூன் விமானத்தை விட குறைந்த விலைக்கு வழங்க முன்வந்ததால் அந்த நிறுவனமே தேர்வானதாக அன்றைய இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னரே தொழில்நுட்பம், சேவைகள், பராமரிப்பு, மேம்பாட்டு செலவு போன்ற அம்சங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி இறுதி விலையை முடிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அதாவது 2012ம் ஆண்டு இறுதி விலையை முடிவு செய்யவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தமானது மொத்தம் 126 விமானங்களுக்கானது. இதில் முதல் 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனமே அவர்களின் நாட்டில் தயாரித்து இறக்குமதி செய்வது என்றும், மீதமுள்ள 108 விமானங்கள் தொழில்நுட்ப வசதி மாற்ற அடிப்படையில் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தோடு (HAL) இணைந்து ரபேல் நிறுவனம் தயாரிக்கும் என்றும் திட்டமிடப்பட்டது.

ஆனால் இதை செய்வதற்கான காலம், மனித வேலை நாட்கள் குறித்தும் மற்றும் தரக்கட்டுப்பாடு, உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் குறித்தும்  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தங்கள் நாட்டில்  தயாரிக்கும் 18 விமானங்களுக்கு மட்டுமே தங்களால் உத்தரவாதம் தர முடியும் என்றும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் விமானத்தின் தரத்தினால் ஏதாவது குறைபாடுகள் வருமேயானால் அவை தங்கள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் உள்ள நற்பெயரை, அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் வாதம் செய்தது.

மேலும், விமானங்கள் விற்கப்படும் தொகையில் 30% பணத்தை இந்திய நிறுவனங்களோடு பங்குதாரராக இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று டஸ்ஸால்ட்  நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டது அன்றைய காங்கிரஸ் அரசு. அதாவது 27000 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும்.

அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கு நிறுவனமானது ஃபால்கான் விமானங்கள், திறன் நகரங்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டது. இதற்கிடையில், சஞ்சய் பண்டாரி என்பவரை தலைவராக கொண்டிருந்த  ஆஃப் செட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனமானது டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் பங்கு சேர துடித்தது. இந்த குழப்ப சூழ்நிலையில் இந்த ஒப்பந்தமானது செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆஃப் செட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் பண்டாரிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், ராகுலின் மைத்துனருமான ராபர்ட் வதேராவுக்கு மிக நெருக்கமானவர் என்பது கூடுதல் தகவல். பின்னர் பாஜக ஆட்சி அமைந்த பின், சஞ்சய் பண்டாரியின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் பாதுகாப்பு அமைச்சரவையின் மிக முக்கிய ரகசிய கோப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சந்திக்க பயந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் பண்டாரி.

விமானத்தின் விலையை மட்டுமே கருத்தில் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கி விட்டதால், சர்வதேச விதிகளின் படி வேறு நிறுவனத்திற்கும் ஒப்பந்தத்தை கொடுக்க முடியாத சூழ்நிலையில், இந்த குழப்பங்களை தீர்த்து இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசிய மற்றும் அவசர முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக அரசு இருந்த வேளையில், 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஃ பிரான்ஸ் நாட்டின் அரசுடன்,  அரசுக்கும் – அரசுக்குமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

126 விமானங்கள் என்ற ஒப்பந்தம் கைவிடப்பட்டு, 36 விமானங்கள் நேரடியாக அந்நாட்டில் தயாரித்து 66 மாதங்களில்  வழங்கப்பட வேண்டும் என்றும், முதல் விமானம் மூன்று வருடங்களில் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்நாட்டின் அன்றைய பிரதமர் ஹோலாண்டே அவர்களிடம் நேரடியாக இது குறித்து பேசப்பட்டது. இடைத்தரகர்கள் யாருமின்றி முடிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தான் இன்று விமர்சனம் செய்கிறார்கள்.

காங்கிரஸ் அரசு செய்த ஒப்பந்தப்படி126 விமானங்களின் விலை 12 பில்லியன் டாலர்கள் (ரூபாய்.86,688 கோடி) ஒரு விமானத்தின் விலை 95 மில்லியன் டாலர். (ரூபாய். 686 கோடியே 28 லட்சம்). தற்போது 36 விமானங்களின் விலை 8.8 பில்லியன்  டாலர் (ரூபாய். 63,571 கோடியே, 20 லட்சம்).

ஒரு விமானத்தின் விலை 1762 கோடியே,65 லட்சத்து,60 ஆயிரம் ரூபாய். இதை தான் தற்போது காங்கிரஸ் அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட அதிகமாக செய்திருப்பதாக கூக்குரலிட்டு கொண்டிருக்கிறார்கள். 2007ல் ஒரு விமானத்தின் விலை 12 பில்லியன் டாலர் என்று இருந்த நிலை, ஜனவரி 2012ல் 15 பில்லியன் முதல் 18 பில்லியன்  டாலராகவும், 2014 ஜனவரியில் 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காது இருப்பதன் மர்மம் என்ன?

மேலும் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அதாவது 2007ல்  வெறும் விமானத்தின் விலை மட்டுமே ரூபாய் 686 கோடியே 28 லட்சம் என்பதும், மனித வேலை நாட்கள் அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கான ஊதியம், விமானத்தில் உள்ள ஆயுதங்கள், சேவைகள், மின்னணுவியல் செலவுகள், மேம்பாட்டு செலவுகள், பயிற்சி, பராமரிப்பு போன்ற அத்துணை அம்சங்களையும் கூட்டி விலை நிர்ணயித்திருந்தால் தற்போதைய பாஜக அரசு செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை விட மிக அதிகமாக காங்கிரஸ் அரசின் ஒப்பந்தம் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி நடந்திருந்தால் அந்த ஒப்பந்தப்படி 2 லட்சத்து,16 ஆயிரத்து,720 கோடி என்பதாக இருந்திருக்கும்.

இவைகளை தவிர  பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி பெற்றிருக்கிறது என்பதை பாராளுமன்றத்தில் தெளிவாக்கியிருக்கிறது தற்போதைய பாஜக அரசு. மேலும், இந்த விற்பனையின் மதிப்பில் 30 விழுக்காடு பணத்தை  ‘ஈடாக’ (OFF SET OBLIGATIONS) முதலீடு செய்ய வேண்டும் என்றிருந்த நிபந்தனையை மாற்றி நமது நாட்டில் 50 விழுக்காடு முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் மாற்றியமைத்துள்ளது பாஜக அரசு.

அதாவது விலை குறித்து விளக்க வேண்டுமென்றால் ஒரு மாருதி சியாஸ் காரின் விலை ரூபாய்.8,00,000/-. அதே மாருதி சியாஸ் காரின் அதிக அம்சங்களுடன் கூடிய மாடல் விலை ரூபாய் 10,00,000/-. காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தம் குறைந்த அம்சங்களுடன். ஆனாலும் அவைகள் குறித்த தெளிவில்லாதே இருந்தனர். ஆனால் பாஜக  செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அதிக அம்சங்களுடன் பொருந்திய வேறொரு வகை என்பதை மறைத்து ரபேல் விவகாரத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன எதிர் கட்சிகள்.

ஒப்பந்தத்தில் ரகசியம் இல்லை என்று சொல்கின்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் அவர்கள், 2008 ஜனவரி 25ம் தேதியன்று செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரபேல் விவகாரத்தில் ரகசியங்கள் அம்சங்கள் பாதுகாக்கப்படும் என்று கையெழுத்திட்டிருப்பது குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்? சட்டப்படி எந்த அரசாக இருந்தாலும் பொது கணக்கு குழு, நாடாளுமன்ற நிலை குழு, மத்திய தலைமை தணிக்கை அதிகாரி ஆகியவர்களிடம் எந்த நேரத்திலும் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் என்பது தெரிந்தும் கூக்குரலிடுவது நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்கின்றன எதிர்க்கட்சிகள் என்ற விமர்சனத்துக்கு வலு சேர்க்கிறது. மேலும், மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில், இந்திய விமான படை தணிக்கையில் ரபேல் விவகாரமும் அடங்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது குறித்து மறைப்பது ஏனோ?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அனில் அம்பானியின் குழுமத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தில் பங்கு உள்ளது என்ற மிக பெரிய அவதூறு பிரச்சாரத்தை ராகுல் செய்துள்ளார். இந்த கட்டுரையில் நாம் சொல்லியுள்ள படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பில் 50 விழுக்காட்டை அதாவது சுமார் 32,000 கோடி ரூபாயை டஸ்ஸால்ட் நிறுவனம் பல்வேறு தொழில்களில் இந்தியாவில் முதலீடு செய்தாக வேண்டும். அனில் அம்பானி மற்றும் டஸ்ஸால்ட் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பால்கான் பயணிகள் விமான உதிரிபாகங்கள் சிலவற்றை இந்தியாவை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது எனபதும் ரபேல் ஒப்பந்தத்தினால் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் முதலீடு அந்த தொகையில் 3 விழுக்காடு (சுமார் 867 கோடி) கூட இல்லை என்பதுமே உண்மை.

மாறாக. இந்தியாவில் 72 நிறுவனங்களுக்கும் மேலாக டஸ்ஸால்ட் நிறுவனம் ;ஈடு செய்யும்’  ஒப்பந்தத்தின் படி முதலீடு செய்யப் போகிறது என்பதும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவை செயல்பட துவங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை தென் இந்தியாவில் குறிப்பாக பெங்களூரில் அமைந்துள்ளன.

குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் கோவையை சேர்ந்த லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ், எல் & டி மற்றும் ரூட்ஸ் ஆகிய நிறுவனங்களும், சென்னையின் எல் & டி தேல்ஸ் நிறுவனத்திலும் முதலீடுகள் அமையப்போகின்றன.

வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு நலன் சேர்க்கும் முயற்சிக்கு முட்டு கட்டை போட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்ன?

இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற பாஜக அரசின் முயற்சிக்கு தடை செய்ய ஏன் காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது? மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற அவர்களின் தீய எண்ணம் எதற்காக? நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏன்? அரசியல் அதிகாரத்திற்க்காக ஆலாய் பறந்து தேசத்தின் வளர்ச்சியை பாழாக்கும் எதிர்க்கட்சிகளின் தரம் தாழ்ந்த  அரசியல் மக்கள் அடையாளம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கட்டுரை: நாராயணன் திருப்பதி. 

(கட்டுரையாளர் – பாஜக செய்தி தொடர்பாளர்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe