பா.ம.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு : முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி

 
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்கு பிறகுமுறைப்படி
வெளியிடப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பா.ம.க.வை குறைகூற முடியாத சிலர் சாதி கட்சி என்ற வதந்தியை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, பா.ம.க. தலித் மக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிய அன்புமணி, சாதி பெயரால் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அமைப்புகளை மட்டுமே பா.ம.க எதிர்ப்பதாக தெரிவித்தார்.
 
மேலும், கடந்த காலத்தில் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்கு மன்னிப்பு கோரிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
 
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பலர் பா.ம.க.வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரத்தில் உள்ள தோணிமடுவு அணை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும், இதற்காக ரூபாய் 118 கோடி தேவைப்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து பேசி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
இதேபோல, மேட்டூர் உபரி நீர் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 
வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பா.ம.க.வின் வேட்பாளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இதில் ஐம்பது விழுக்காடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவர் என்றார். தமிழகத்தில் ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சிறை செல்வது உறுதி என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி கூறியுள்ளார்.