ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைவரிசை: இந்தோனேசிய குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் அதிபர் மாளிகை, ஐ.நா. அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் போலீசார் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

இந்தோனேசியாவில், முக்கிய இடங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை மற்றும் ஐ.நா. அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்தன. உணவகம், வணிக வளாகம் உள்ளிட்ட 7 இடங்களில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

உணவகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. சாலைகள் சேதமடைந்தன. 6 பேரின் உடல்கள் சாலைகளில் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. கட்டடங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அவர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். 10 முதல் 14 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.