kadeswara subramaniam hindu munnani - 2026

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

அரசியல் சற்றுமுன் தமிழகம்
kadeswara subramaniam hindu munnani - 2026

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாகரிகத்திலும், பண்பாட்டிலும் சிறந்த தமிழகம் சீரழிந்து போனதற்கு திராவிட சித்தாந்தமும் மற்றும் திமுகவின் நிர்வாக திறனற்ற ஆட்சியும் தான் காரணம்.

இராமநாதபுரத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவிக்க சென்ற போது 7 மணி நேரம் அலைக்கழிக்கப் பட்டதாக வந்துள்ள செய்தியானது, திமுக ஆட்சியில் காவல்துறை மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதி படுத்துகிறது.

சமீபத்தில் விளாத்திகுளம் சிறுமி காணாமல் போனது குறித்த புகார் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டு தாமதப் படுத்தியதுதான் அந்த சிறுமியை நாசப்படுத்தி கொல்வதற்கு குற்றவாளிக்குத் தைரியம் கொடுத்துள்ளது.

பெண்கள், சிறுமிகள் மீதான குற்றங்களில் காவல்துறை மெத்தனம் போக்கிற்கு காரணம் அதில் ஈடுபடும் திமுகவினரைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்று மக்கள் பேசுகின்ற நிலை இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான வன்முறை முதல் நேற்று இராமாநாதபுரம் சிறுமி மீதான பாலியல் சீண்டல் வரை தமிழக காவல்துறை செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்க அளவில் இருக்கிறது.

ஆனால் திமுக முதல்வர் ஸ்டாலின் இவை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. சென்னை அண்ணா நகரில் நடந்த போக்சோ குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடந்தையாக உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாக சீரழிவுக்கு இதைவிட சாட்சி வேண்டுமா. கண்ணகி சிலைக்கு கண்ணீர் வடித்த திமுக ஆட்சியில் கண்ணகிக்கே நீதி கிடைக்காது என்று கூறும் அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது.

இந்த நவீன காலத்தில் இன்னமும் காவல்துறை விரைவாக செயல்படாமல் மெத்தனமாக இருப்பதும், மனிதாபிமானமற்ற முறையில் புகார் தெரிவிப்போரை அலைகழிக்கப்பதும் காவல்துறை மீதான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

இனியும் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியம் செய்யுமேயானால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் அபாயம் உள்ளதை அரசு உணர வேண்டும்.

திமுக ஆட்சியில் சலுகைகளும், இலவசங்களும் தந்த போதிலும் பெண்களின் மீதான வன்முறை மீது தக்க நடவடிக்கை எடுக்கத் தவறி உள்ளது . அதே போல் தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் கூட போதை பொருள் பாதிப்பு இருக்கிறது. இவைகளை அடக்க முடியாமல் காவல்துறை திராணியற்று முதல்வரின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் காவல்துறையின் கைகளை கட்டி செயலற்று நிற்க வைத்த திமுக.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்பதை இந்துமுன்னணி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறது.

காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் பாமர மக்களின் புகார்களை உடன் விசாரித்து குற்றங்களைத் தடுக்க, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.