சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பாசத்துடன் கருத்துகூறியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, மத்திய அமைச்சராக இருப்பதால் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், அப்பகுதியில் தடையை மீறி பலர் நுழைந்து கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாற்றியுள்ளார். அதாவது தமிழகத் தொழிலாளர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகவும், அதன் காரணமாகத் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் வெங்கைய நாயுடு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆந்திரம் மீது எந்த குற்றச்சாற்றையும் சுமத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வெங்கைய நாயுடு, கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை கடத்தல்காரர்களாக சித்தரித்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிடப் பணிக்காக சென்று கொண்டிருந்த தமிழர்களை நகரி என்ற இடத்தில் பேரூந்தை வழிமறித்து ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சி உறுதி செய்திருக்கிறார். இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அதன் உண்மைத் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், மூத்த மத்திய அமைச்சரான வெங்கைய நாயுடு மாநில பாசத்துடன் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதே பழி சுமத்த முயன்றிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. – என்று கூறியுள்ளார்.
மாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari