
குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் சுவாமி விக்ரகங்களை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கேரளாவில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இந்த சிலைகளை வெளிநாடுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. சிவாலய ஓட்டத்தில் இது இரண்டாவது சிவ ஆலயமாக திகழ்கிறது.
மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு சிறப்புகள் பல உள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இந்த கோயில் கதவு உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சுவாமி சிலைகள் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் செம்பினால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பினால் ஆன திருமுகங்கள் செம்பினால் ஆன திருவாசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
புராதனமான இந்தக் கோயிலில் கொள்ளை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களைக் கண்காணித்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்து சென்ற ஒரு கும்பல் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் (35 வயது) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

அவரது நண்பர் 36 வயதான உசேன், இவரது கள்ளக்காதலி அமரவிளையைச் சேர்ந்த இளம்பெண் எஸ்மிதா ஆகியோர் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
போலீசார் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் … உசேனும் எஸ்மிதாவும் கணவன் மனைவி போல பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டம் விடுவார்கள்.
மிகப் பழமையான கோயில்களில் உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன பொருட்கள் உள்ள கோயில்களை தொடர்ந்து பல நாட்களாக நோட்டம் விடுவார்கள். பாதுகாப்பு குறைவான கண்காணிப்பு கேமரா இல்லாத கோயில்கள் மற்றும் எளிதாக தப்பிச் செல்ல வசதி உள்ள கோயிலை தேர்ந்தெடுத்து அங்கே தொடர்ந்து பல நாட்கள் பூஜை செய்வது போல் சென்று வருவார்கள்.

மகாதேவர் கோயில் ஆற்றங்கரையில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாலும், எளிதாக கேரளாவுக்கு தப்பிச் சென்று விடலாம் என்பதாலும் இந்தக் கோயிலில் கொள்ளை அடிக்க முடிவு செய்துள்ளனர்.
அங்கு முதல் முறையாக கொள்ளையடிக்க முயன்ற போது அவர்களுக்கு உடல் நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு திரும்பினார்கள்.
பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி வந்து கொள்ளையடித்தனர். அவர்கள் காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருள்களை பெயர்த்து எடுத்து காரில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் திருவல்லாவுக்குச் சென்று, அங்குள்ள பாலத்தில் இருந்து மதிப்பு குறைவான பொருள்களை ஆற்றில் வீசி விட்டனர். விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்று உள்ளனர்.
இந்தச் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருந்தனர். தற்போது சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் பல உள்ளன. மேலும் உசேனும் விபத்தில் சிக்கியுள்ளார். எஸ்மிதாவுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலையை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!