ராகுலின் மொழிபெயர்ப்பாளர் மாற்றம்

சற்றுமுன் தமிழகம்

04 July30 Ragul gandhi - 2026

இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சை காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிதுரை பொழிபெயர்க்க உள்ளார். சென்ற மாதம் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது அவரது பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி, நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றினார். காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையை, கே.வி.தங்கபாலு மொழிபெயர்த்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளின் பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி நடக்கஉள்ளது. சுட்டெரிக்கும் வெயிலோடு தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் 5 நாட்களே இருப்பதால் கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று தமிழகம் வருகிறார். இன்று ஒரே நாளில் 4 இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தை தொடங்கும் ராகுல், பின்னர் பகல் 1 மணிக்கு சேலத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் ராகுலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து விமானத்தில் மதுரை வரும் ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். மாலை 4.30 மணிக்கு அங்கு நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார். பின்னர் மதுரை திரும்பும் ராகுல், திருப்பரங்குன்றம் மண்டேலா நகரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.