அந்த 5 பிரச்னைகள்: குஷ்பு, இளங்கோவன், ப.சிதம்பரத்தை சந்தித்த விஜயகாந்த்

Published:

சென்னை: இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும், விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினாராம். இந்த சந்திப்பின்போது, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, குஷ்பு, தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். அவர் முன் வைத்த அந்த 5 பிரச்னைகள்: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் மசோதா, கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் பிரச்னை, செம்மரக் கடத்தல் காரணம் கூறி தமிழர்கள் கொல்லப்பட்டது, தமிழக மீனவர்கள் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் நிலை ஆகிய ஐந்து பிரச்னைகளை முன்வைத்து விஜயகாந்த் சந்தித்ததாகக் கூறியிருந்தார். தமிழகத்தில், சட்ட மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகுமாறு எல்லாக் கட்சிகளுமே இப்போதே தங்கள் அரசியல் நடவடிக்கைகளை துவக்கி விட்டன. மேலும், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கருணாநிதியை சந்தித்து, கூட்டணிக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் விஜயகாந்த் என்ற கருத்தும் இல்லாமல் இல்லை. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்த், கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இப்போதே அரசியல் பேச்சு களை கட்டிவிட்டது.

Related articles

Recent articles

spot_img