பஸ்ஸில் சென்றவர்களை இழுத்துச் சென்று சுட்டனர்: தப்பிய 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்

புது தில்லி: ஆந்திர என்கவுண்டர் சம்பவத்தில், தப்பி வந்த 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்று சுட்டு என்கவுன்டர் கணக்கு காட்டியுள்ளனர் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அங்கிருந்து உயிர் தப்பிய இருவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். இதனால், ஆந்திர அரசுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்காக திருவண்ணாமலையைச் சேர்ந்த சேகர், தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், தில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். நேற்று இரவே சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்ற இவர்களை மதுரையைச் சேர்ந்த பீப்பிள் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு பாதுகாத்து வருகிறது. இதனிடையே மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த இளங்கோ, அடையாள அட்டை பிரச்னை காரணமாக அங்கே வாக்குமூலம் அளிக்கச் செல்லவில்லையாம். இவர்கள் மூவரும், மேலும் 7 பேருடன் சேர்ந்து மரம் வெட்டுவதற்காக திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ்சை வழிமறித்து நிறுத்திய ஆந்திர மாநில போலீசார், 7 பேரை இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததால் வேறு யாரோ பயணிகள் போலும் என்று நினைத்து அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில்தான், பிடித்துச் செல்லப்பட்ட 7 பேரும் என்கவுண்டரில் இறந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளது ஆந்திர அரசு. ஆனால், அவர்கள் பஸ்சில் இருந்து போலீஸாரால் இறக்கிக் கொண்டு செல்லப்பட்டதை, சாட்சியங்கள் மனித உரிமை ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், சாட்சிகளிடம் முழுமையாக விசாரித்துவிட்டு, நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த வழக்கில், என்கவுன்டரில் இருந்து தப்பியுள்ள இந்த மூவரின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.