ரயில்களில் யாராவது சீண்டினால் உடனே புகார் கொடுங்க…! ரயில்வே டிஐஜி!

Published:

salem railway ig - 2026

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்….

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவலிபாளையம் எனும் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதை பயன்படுத்தி அண்மையில் நள்ளிரவில் அந்த வழியாக மெதுவாக செல்லும் ரயில்களில் கொள்ளையர்கள் ஏறி பெண்களிடம் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் சேலத்தில் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இச்சம்பவம் குறித்து தமிழக ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சேலம் ஜங்ஷன் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், ரயிலில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து பயணிகள் தைரியமாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அறிவிக்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

இதற்காக ஜிஆர்பியின் இலவச உதவி எண் 1512 மூலமாகவோ அல்லது ஜிஆர்பி செயலி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்த அவர் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புகார் தெரிவிக்கும் நபர் குறித்த ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img