அமித் ஷாவுடன் நேற்று ஆளுநர்; இன்று தமிழக அமைச்சர்கள்… திடீர் சந்திப்பு!

Published:

amitsha thangamani velumani - 2026

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, இன்று தமிழக அமைச்சர்கள் இருவர் சந்தித்துப் பேசினர்.

தில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,168 கோடி நிதி ஒதுக்குதல், கோவை விமான நிலைய விரிவாக்கம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவை அமித் ஷாவிடம் அளித்தனர்.

முன்னதாக தில்லி சென்ற தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் முக்கிய மின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த வேலுமணி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், சிவகங்கை மாவட்டத்துக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், குடிநீர் திட்டங்களை புனரமைத்தல், மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள், வறட்சி நிவாரணம் ஆகியவற்றுக்கு ரூ. 5,398 கோடி நிதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

முன்னதாக, தமிழக அரசியல் சூழல், தமிழக அரசின் செயல்பாடுகள், அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் இவை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துடன் அமித் ஷா உரையாடியதாகக் கூறப் படுகிறது. அப்போது, துணை வேந்தர் நியமனங்களில் கடைபிடிக்கப் பட்ட வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற தன்மை ஆகியவை குறித்து அமித் ஷா பாராட்டியதாகவும், அதிமுக., அரசின் ஊழல்கள் தொடர்பான நடவடிக்கைகளை வெளிப்படையாக எதிர்கொள்ளலாம் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img